ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்

ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

“நேர்மறையான” திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான அசாதாரண மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.

இந்த சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், உக்ரைனுக்கு உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

“இரு பிரதிநிதிகளும் தங்கள் பேச்சுவார்த்தை குழுக்களை பெயரிடவும், உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை வழங்கும் ஒரு நீடித்த அமைதியை நோக்கி உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை ஜெட்டாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரூபியோ, ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் “ஆக்கபூர்வமான தன்மைக்கு” உக்ரைன் ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்யா “போரை நிறுத்த அல்லது போரைத் தொடர அதன் விருப்பத்தைக் காட்ட வேண்டும்” என்று ஜெலென்ஸ்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share This