மொஸ்கோ மீது உக்ரைன் ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ஒரு “பாரிய” ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ
மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவுடன் பகுதி போர்நிறுத்தத்திற்கான திட்டத்தை உக்ரைன் அமெரிக்காவிற்கு முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு (01:00 GMT) தொடங்கிய இந்த தாக்குதலின் விளைவாக ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் மொஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் போது ஒரே இரவில் 337 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாகவும், அவற்றில் 91 மொஸ்கோ பிராந்தியத்தில் இருந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலின் விளைவாக, நகரத்தின் தெற்கே டோமோடெடோவோ, வுனுகோவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி மற்றும் வடக்கே ஷெரெமெட்டியோ உள்ளிட்ட நான்கு மாஸ்கோ விமான நிலையங்களில் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது.
ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சவுதி அரேபியாவில் கூடியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.