யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற இருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது

கனடாவின் பிக்கரிங் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடாவின் மார்க்கமில் வசிக்கும் 24 வயதான கோகிலன் பாலமுரளி மற்றும் டொராண்டோவில் வசிக்கும் 24 வயதான பிரானன் பாலசேகர்ஆகியோர் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர்.
முதலாவதாக, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட இருவரிடன் ஏன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை பொலிஸார் அப்போது அறிவித்திருக்கவில்லை.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, கொலை செய்ய சதி செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும், திருட்டு என இரண்டு குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் அவர்கள் மீது சுமத்தினர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் வேலைக்காக கனடா சென்று அங்கு குடியேறியவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு கொலைகளில் ஒன்று, உணவகத்தில் பணிபுரியும் போது ஏற்பட்ட சம்பள தகராறில் நடந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குற்றத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள சி.சி.டி.வி கேமரா அமைப்புகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களின் முகங்களை வரைந்து, மாகாணத்தின் ஒவ்வொரு இடத்திலும் அவற்றைக் காட்டிய பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.