தீவிரமடையும் வர்த்தகப் போர் – சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

தீவிரமடையும் வர்த்தகப் போர் – சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ள போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கட்டணப் போரிலிருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில், சீனா தனது பதிலடி வரிகளை மீளப் பெறாவிட்டால் கூடுதலாக 50 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட 20 சதவீத கட்டணங்களுக்கும், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 34 சதவீத கட்டணங்களுக்கும் கூடுதலாகும்.

ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்காவிற்குள் நுழையும் சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி விதிக்கப்படும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 34 சதவீத வரியை அறிவித்தது.

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 34 சதவீத வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது சீனா கூடுதல் வரிகளை விதித்துள்ளது. இதை அறிவித்த 48 மணி நேரத்திற்குள் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவிற்கு எதிரான வரிகளை ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் மூலம் அறிவித்தார்.

அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட 34 சதவீத வரியை சீனா திரும்பப் பெறவில்லை என்றால், கூடுதலாக 50 சதவீத வரியை விதிப்பதாக ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த சீன வர்த்தக அமைச்சகம், அமெரிக்காவின் வரிகளை ‘இறுதிவரை’ எதிர்த்துப் போராடுவோம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதன் பெயரில், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருட்களுக்கு 10 முதல் 49 சதவீதம் வரை இறக்குமதி வரிகளை ட்ரம்ப் விதித்தார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பதில் வரிகளை ட்ரம்ப் அறிவித்திருந்தார். அத்துடன் வரிகளை விதிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்கா மீது பழிவாங்கும் வரிகளை விதிக்காத நாடுகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Share This