உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் நிறுத்தம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளை உடன் அமுலாகும் வகையில் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா, உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு இடையே பதட்டங்களை அதிகரிக்கும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார். அந்த இலக்கை அடைய எங்கள் நட்பு நாடுகளும் உறுதிபூண்டிருக்க வேண்டும்” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“எங்கள் உதவி ஒரு தீர்வுக்கு பங்களிப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் அதை இடைநிறுத்தி மறுபரிசீலனை செய்கிறோம்,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் டிரம்புடன் சொற்போரில் ஈடுபட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இது ரஷ்யா-உக்ரைன் போரில் கொள்கை மற்றும் கூட்டணிகளில் மாற்றத்தைக் காட்டியது.
டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு இடையிலான சந்திப்பு சர்வதேச ஊடகங்கள் முன் நடந்த ஒரு வார்த்தைப் பரிமாற்றத்தில் இரு தலைவர்களும் மோதிக்கொண்டனர்.
உக்ரைன், ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.