ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு: போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்காவின் அலாஸ்காவில் நாளை நடக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான சந்திப்பில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை அடைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 2022ல் போர் ஆரம்பமானது.
இந்த போரை நிறுத்துவது குறித்து பேச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அழைத்துள்ளார். இந்த உயர்மட்ட சந்திப்பு நாளை நடக்கிறது.
இந்நிலையில், போர் குறித்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் நேற்று ஒன்லைன் மூலமாக ஆலோசித்தார்.
இந்த கூட்டம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் கூறுகையில், “ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை அடைய விரும்புவதாக டிரம்ப் மிகவும் தெளிவாக தெரிவித்தார்.
“இதை தொடர்ந்து, டிரம்ப், புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.
அதேவேளை, உக்ரைனில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து செயற்பட தயார் என ஆஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துள்ளது.
அத்துடன், உக்ரைன்மீதான சட்டவிரோத போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடமும் வலியுறுத்தியுள்ளது.
இப்போரை அடிப்படையாகக்கொண்டு ரஷ்ய படைகள் மற்றும் போருக்கு பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியாவால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.