நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ. மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில், மாலை அல்லது இரவில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்தக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.