சென்னை அணியின் தலைவர் இவர்தான் – உறுதிப்படுத்தினார் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக ஐபிஎல் 2025 தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதற்கு ஏலத்தில் சரியான அணி அமையாததும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான அணியை தயார்படுத்தி வருகின்றனர். சீனியர் வீரர்கள் இல்லாத ஒரு முற்றிலும் இளம் வீரர்கள் அடங்கிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறி வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு யார் தலைவராக இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்து வந்தது. காரணம் டிரேடு மூலம் சில வீரர்கள் அணிக்குள் வர உள்ளதால், தலைவர் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் தோனி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரரான தோனி அடுத்த ஆண்டு சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட தோனி, ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2026 தொடரில் தலைவராக செயல்படுவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2025 தொடரில் ருதுராஜ் கெய்க்வாடிற்கு கையில் காயம் ஏற்பட்டதால் மீண்டும் தோனி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
“கடந்த ஆண்டு அணியில் நிறைய விஷயங்கள் சரியாக செயல்படவில்லை, தற்போது துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்தி வருகிறோம், அடுத்த ஆண்டு நிச்சயம் நன்றாக விளையாடுவோம்” என்று தோனி தெரிவித்துள்ளார்.
எங்களது துடுப்பாட்ட வரிசை எங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆனால் தற்போது அது சரியாகிவிட்டது என்று நம்புகிறோம். அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும்.
ஐபிஎல் 2025-ல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
அதில் அணியில் உள்ள ஓட்டைகளை அடைக்க சில வீரர்களை எடுக்க உள்ளோம்” என்று தோனி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் கடைசி நிமிடத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த தொடரில் இருந்தும் விலகியுள்ளார். தற்போது துலிப் டிராபி தொடரில் ருதுராஜ் இடம் பெற்றுள்ளார்.
“கடந்த இரண்டு ஆண்டுகள் எங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வது தான் முக்கியம். உங்களுக்கு கெட்ட நேரங்கள் வரலாம், ஆனால் என்ன தவறாக நடந்தது என்பதை உணர வேண்டும்.
ஒவ்வொரு தவறுகளில் இருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். என்ன தவறு என்பதை தெரிந்து கொள்ள எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. ப்ராசஸ்தான் மிகவும் முக்கியம். வரும் காலத்தில் அணியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து எங்களது முழு திறனை காட்டுவோம்.
சென்னை எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாக சென்னையுடனான உறவு வளர்ந்துள்ளதாக நான் உணர்கிறேன். அது ஒரு நபராக என்னை மேம்படுத்த உதவியது. ஒரு கிரிக்கெட் வீரராக என்னை மேம்படுத்த உதவியது.
இப்போதெல்லாம் நாம் சிஎஸ்கே என்று சொல்லும்போது, அது இந்தியாவில் மட்டுமல்ல, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அல்லது கிரிக்கெட் விளையாடும் எந்த நாடுகளுக்கும் செல்லும்போது, அது ஒரு பிராண்டாக மாறுகிறது,” என்று தோனி குறிப்பிட்டார்.