இவ்வாண்டுக்குள் சிவப்பு அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை; கடந்த அரசாங்கமே காரணம்

இவ்வாண்டுக்குள் சிவப்பு அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை; கடந்த அரசாங்கமே காரணம்

இவ்வாண்டுக்குள் சிவப்பு அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் 161,067 ஹெக்டேயர் சிவப்பு நெல் பயிரிடப்பட்டுள்ளதுடன் பெரும் போகத்தில் 648,216 ஹெக்டேயர் நெல் அறுவடை எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதுடன், சராசரி நெல் அறுவடையானது ஹெக்டேருக்கு 4,000 கிலோகிராம், ஆகவே, சிவப்பு அரிசி பற்றாக்குறையாவதற்கு எந்த காரணமும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுக்குள் சிறு மற்றும் பெரும் போகங்களில் 277,315 ஹெக்டேயர் சிவப்பு நெல் பயிரிடப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் 1.1 மில்லியன் மெட்றிக் தொன் நெல் அறுவடை கிடைக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசேடமாக, சிவப்பு அரிசியானது மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை போன்று தெற்கு பிரதேசங்களில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பயிரிடப்படுகின்றது.

சிவப்பு அரிசி விளைச்சல் காணப்படும் பிரதேசங்களில் நெல் ஆலை களஞ்சியசாலைகள் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் கடந்த அரசாங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்தியாவிலும் சிவப்பு அரிசியின் விலை அதிகமாக காணப்படுவதனால் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போது கப்பல் செலவுகளைத் தவிர்த்து சிவப்பு அரிசி மெட்றிக் தொன் ஒன்று 600 டொலராக காணப்படுவதால் அரசாங்கம் எனும் ரீதியில் இந்தியாவுடன் கலந்துரையாடி 7,500 மெட்றிக் தொன் சிவப்பு அரிசியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் STC நிறுவனம் மூலம் அழைக்கப்பட்டுள்ளதாக வசந்த சமரசிங்க விளக்கமளித்தார்.

Share This