“கிளீன் ஸ்ரீலங்கா” நகர வனத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொட்டலங்கவில் ஆரம்பம்

“கிளீன் ஸ்ரீலங்கா” நகர வனத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொட்டலங்கவில் ஆரம்பம்

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நகர வனத் திட்டம் நேற்று (17) காலை தொட்டலங்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, தொட்டலங்கவில் உள்ள கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மரங்களை நட்டு பாதுகாக்கப்பட்ட நகர்ப்புற வனத் தோட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மதிப்புமிக்க இந்த மரக் கன்றுகளைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு மாதம்பிட்டிய ஸ்ரீ சங்கபோதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கெபிடல் மகாராஜா குழுமத்திற்குச் சொந்தமான எஸ்-லோன் லங்கா நிறுவனத்தால் செயற்படுத்தப்படும் ” துரு கெபகரு” திட்டமும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமும் இணைந்து ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை , நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை மற்றும் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன், கெபிடல் மகாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளர் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.சி. வீரசேகர, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This