
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும்
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக நடவடிக்கைகளுக்கு 137,016 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கமைவாக 11.57 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை மின்சார சபை முன்வைத்துள்ளது. எனினும் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை அதிகரிப்பதால் நடுத்தர மக்களுக்கும், தொழிற்துறையினருக்கும் ஏற்படும் பாதிப்பை மின்சார சபை இதுவரை மதிப்பிடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளது. மின்சார சபையின் சட்டத்துக்கு அமைவாகவே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 25 ரூபா வரை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடைவதற்காகவே மின்சார கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
