பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், ‘பட்டலந்த’ வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண – காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம்.
ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது.
மூன்றாவது, 1994 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை சந்திரிகாவுக்கும் 2005 இல் இருந்து 2009 வரை மகிந்தவுக்கும் ஆதரவு வழங்கி தேன்நிலவை அனுபவித்த காலத்தில் இந்த ‘பட்டலந்த ‘ வதை முகாம் பற்றிய அறிக்கையை ஜேவிபி ஏன் கோரவில்லை என்ற சந்தேகங்கள்.
இதில் முதலாவது காரணத்தை நோக்கினால்,
1988- 89 ஆண்டுகளில் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் அமைச்சராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக ரஞ்சன் விஜேரட்ன இருந்தார். ‘பட்டலந்த’ வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ. கருணாரத்ன அப்போது முகாமில் நடந்த ஈவிரக்கமற்ற கொலைகள் பற்றி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
குறிப்பாக சட்டத்தரணி விஜயதாஸ லியனாரச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை பற்றி அவர் அந்த நேர்காணலில் விபரித்துள்ளார்.
சட்டத்தரணி விஜயதாச குற்றுயிராக இருந்த நிலையில் முகாமுக்கு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும், ரணில் விக்கிரமசிங்கவும் வந்து சென்றதாக அவர் கூறுகிறார்.
ஆகவே, இப் படுகொலைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி காரணம் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருந்தது என்பதும் வெளிப்படையான ஒன்று. அதுவும் ரணிலின் இச் செயற்பாடுகள் பற்றி கடந்த 30 வருடங்களில் நாடாளுமன்றத்தில் சிங்கள உறுப்பினர்கள் பலரும் ஆதாரங்களுடன் சுட்டியிருக்கின்றனர். 1990 களில் நாடாளுமன்றத்தில் ‘பட்டலந்த’ என்ற பட்டப் பெயரும் ரணிலுக்கு இருந்தது.
இப் பின்னணியில் இரண்டாவது காரணத்தை நோக்கினால்,
இந்த ரணில் விக்கிரமசிங்கவை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவிட்டதாகவும் இனப்பிரச்சினைக்குரிய தீர்வை ரணில்தான் வழங்கக்கூடியவர் எனவும் முற்போக்குத் தமிழர்கள் பலரும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் தமிழர்களும் திட்டித் தீர்த்தனர், ரணிலுக்குப் புனிதர் பட்டமும் வழங்கியிருந்தனர்.
ரணில் 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சில் புலிகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில் ரணில் மேற்கொண்ட இரகசிய காய்நகர்த்தல்களை அறிந்துகொண்ட பின்புலத்தில்தான் ரணிலை 2005 இல் புலிகள் ஜனாதிபதியாக்க விரும்பியிருக்கவில்லை என்பது நிதர்சனம்.
இதன் காரண – காரியத்தோடு தான் ரணில் ஒரு ‘நரி’ என 2006 ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
1990 களில் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ‘பட்டலந்த’ என்று பட்டப் பெயர் வைத்திருந்த சிங்கள உறுப்பினர்கள் பலரும் 2010 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் ரணிலை நரி என்றும் அவ்வப்போது உச்சரித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்தான் ரணில் ஒரு நரி என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினர்.
அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தை நல்லாட்சி என்றும் ரணில்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்கும் நாயகன் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தம்பட்டம் அடித்த காலமும் உண்டு.
இந்த வரலாற்றோடு மேற்படி மூன்றாவது காரணத்தைச் சற்றுப் பின்னோக்கி ஆராய்வோம்.
17 வருடங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், ‘பட்டலந்த ‘ வதை முகாம் மாத்திரமல்ல, ‘சூரியவெ’ படுகொலை உள்ளிட்ட ஜேவிபிக்கு எதிரான பல கொலைகளை விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருந்தது.
போரை நிறுத்தி புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தப்படும் என்றும் அப்போது சந்திரிகா மார் தட்டியிருந்தார். 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடந்த கொலைகள், அட்டூழியங்கள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாகக் காண்பித்தார்.
தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரிகா பின்னர் பிரதமராகவும் சில மாதங்களில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதாவது, முதன் முறையாக அரசியலில் ஈடுபட்டு 18 மாதங்களில் மேல் மாகாண சபை முதலமைச்சர், பின்னர் பிரதமர் அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.
அதன்போது ஜேவிபி சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஜேவிபியும் 1994 இல் முதன் முறையாக ஜனநாயக வழியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிஹால் கலப்பத்தி சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தார்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் சந்திரிகாவுக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
அதேநேரம், தேர்தல் பிரச்சாரங்களின் போது உறுதியளித்தபடி புலிகளுடன் சமாதானப் பேச்சையும் சந்திரிகா ஆரம்பித்தார். ஆனாலும், பேச்சுகள் முறிவடைந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இந்தப் போருக்கு ஜேவிபி முழு ஆதரவு வழங்கியது.
ஆனால், நிஹால் கலப்பத்தி சந்திரிகாவிடம் முன்வைத்த நிபந்தணைகளுக்கு நடந்தது என்ன? பட்டலந்த வதை முகாம் பற்றி மாத்திரமே சந்திரிகா விசாரணை நடத்தினார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அத்துடன், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படவுமில்லை.
நிஹால் கலப்பத்தி ஆதரவை விலக்கிக் கொண்டார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அங்கு பல கொலைகள் நடந்தன. 1996 இல் கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். 600 இற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் – பெண்கள் கொல்லப்பட்டு செம்மனியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிசாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பல திட்டமிடப்பட்ட படுகொலைகள் சித்திரவதைகள் நடந்தன. குறிப்பாக மட்டக்களப்பில் குடும்பப் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கிரனேட் வீசப்பட்டு நடந்த கோரக் கொலைகள் அன்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன.
ஆனால், சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற இக் கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த வதை முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று ஜேவிபி எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது.
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், ‘நுவா’ எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள – தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது.
இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார். அத்துடன் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கை வருவதற்கு சந்திரிகா அனுமதியும் வழங்கினார்.
1988 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற சோமவன்ச அமரசிங்க 2000 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாடு கல்கிசை ஹோட்டேலில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சோமவன்ச ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களைத் திரட்டி புலிகளுக்கு எதிரான போருக்கு அனுப்புவேன் என்று உறுதியளித்திருந்தார்.
தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று முழங்கியிருந்தார்.. இதனால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜேவிபி பெற்றது. ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா ”நற்சான்றிதழ்” என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்திருந்தார். ஆனால், இந்த ஆட்சியில் கூட பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி சந்திரிகாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இருந்தாலும் இந்த அரசாங்கமும் கவிழ்ந்து 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
அக் காலத்தில்தான் நோர்வேயின் சமாதான முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் நோர்வேயின் சமாதான முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, பட்டலந்த வதை முகாம் உட்பட தங்களுக்கு எதிராக 1970 களிலும் 1988 -89 ஆம் ஆண்டுகளிலும் இலங்கை இராணுவம் புரிந்த படுகொலைகள் தொடர்பாக பேசாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மாத்திரமே முன்னெடுத்திருந்தது.
இதனால் ஜேவிபிக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தது.
சந்திரிகா ஜனாதிபதியாக இருக்க ரணில் பிரதமராக இருந்தார். அரசாங்கம் வேறு கட்சியாகவும் ஜனாதிபதி மற்றொரு கட்சியாகவும் முதன் முதலில் மாறுபட்ட ஆட்சி முறை ஒன்று இலங்கைத்தீவில் உருவானது.
இச் சூழலில்தான் நோர்வேயின் ஏற்பாட்டுடன் சந்திரிகா ஆரம்பித்த சமாதான முயற்சியை ரணில் முழுமைப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜேவிபி பௌத்த பிக்குமாரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஜேவிபிக்கு மறைமுக ஆதரவு வழங்கினார்.
ஜேவிபியின் எதிர்ப்பை காண்பித்து நோர்வேயின் சமாதான முயற்சிகளில் பல இடர்பாடுகளை சந்திரிகா உருவாக்கினார். ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகாவின் எதிர்ப்புகளை மேற்கோள் காண்பித்து பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை தட்டிக்கழித்தார். அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை தடுக்க சந்திரிகாவின் எதிர்ப்பை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினார் ரணில்.
இந்த இழுபறியில் தான் 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது.
இந்த இழுபறி நிலையினால் ரணிலின் அரசாங்கத்தை சந்திரிகா கலைத்தார். இதனால் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. நோர்வேயின் சமாதான முயற்சிக்கு எதிராகவே ஜேவிபியும் சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.
சந்திரிகாவின் வெற்றிலைச் சின்னத்தில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜேவிபிக்கு 39 ஆசனங்கள் கிடைத்தன. சந்திரிகா அமைத்த அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
ஆனால், அந்த அரசாங்கத்தில் கூட ‘பட்டலந்த’ வதை முகாம் தொடர்பான அறிக்கை யை ஜேவிபி கோரவில்லை. மாறாக நோர்வேயை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ஜேவிபியின் ஒரேயொரு இலக்காக இருந்தது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக் கடுமையாக உழைத்த ஜேவிபி புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த கடும் அழுத்தங்களைக் கொடுத்தது.
ஆக புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே ஜேவிபிக்கு 1994 இல் இருந்து 2009 மே மாதம் வரை இருந்தது என்பது இங்கே கண்கூடு.
எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் இனவாதத்தை மூலதனமாக்கி 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ள ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி, பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்திருக்கிறது.
உண்மையில் பாதிக்கப்பட்ட ஜேவிபி உறுப்பினர்கள் – ஆதரவாளர்கள் மற்றும் சாதாரண சிங்களப் பொதுமக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காவே என்று சிங்கள மக்கள் நம்பலாம். ஆனால் நோக்கம் அதுவல்ல.
இதை மூன்று வகைப்படுத்தலாம்
ஒன்று, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளை மடைமாற்றி எண்பது வருட அரசியல் போராட்டத்தை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றுவது.
இரண்டாவது, இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள் சிலரையும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் சிலரையும் தண்டித்தால் போதும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு ”இலங்கை ”ஒற்றை அரசு” என்ற கட்டமைப்பு நியாயமானது நீதியானது என்ற எண்ணப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவது.
மூன்றாவது, ரணில் – சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்காலத்தில் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லது புதிய அரசியல் அணியாகச் செயற்படுவதை தடுப்பது.
ஆகவே “மாற்றம்” “சோசலிசம்” என்று மார் தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபி, இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்
ஒன்று – ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக நடந்த 30 வருட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டமை, சித்தரவதை செய்யப்பட்டமை என்பது இன அழிப்பின் வெளிப்பாடு. தமிழர்களின் மரபு அடையாளங்கள், கலாசாரங்கள் கூட 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலிலும் அழிக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது – பட்டலந்த வதை முகாம் உட்பட பல வதை முகாம்களில் ஜேவிபி உறுப்பினா்கள்- ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமை சித்திரவதை செய்யப்பட்டமை என்பது ஒரு இனத்துக்குள் நடந்த கொலைகள். அது இன அழிப்பு அல்ல.
ஆனால், ஈழ விடுதலைப் போரிலும் ஜேவிபி கிளர்ச்சியின் போதும் நடந்த கொலைகளுக்கு நீதி விசாரணை என்பது அவசியம். அது சர்வதேச நீதி விசாரணையாக அமைவது மிக மிக அவசியம்.
ஆகவே, மேலும் இரண்டு விடயங்களை ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்று – பட்டலந்த வதை முகாம் அறிக்கையை மாத்திரம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்து அதனை வெறும் பேசுபொருளாக சித்தரிக்க முயற்சிக்கும் நகர்வு என்பது ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அரசியல் அநீதி.
இரண்டாவது – பட்டலந்த முகாம் அறிக்கையை உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தினால், பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.
ஆகவே, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பட்டலந்த முகாம் அறிக்கை மாறலாம். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் வியூகங்களுக்குள் மாத்திரம் மூழ்கியிருப்பது மிக மிக ஆபத்தானது. புதிய இளம் தலைமுறை இந்த வரலாறுகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் – ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.
அ.நிக்ஸன்