ஜேஆர் அறிமுகப்படுத்திய மொசட் அணுகுமுறையும் அநுரவின் புதிய காய்நகர்த்தலும்

வடக்குக் கிழக்கு இணைப்பு – சுயநிர்யண உரிமை போன்ற சுய ஆட்சிக்கான ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் விடுதலைக் கோரிக்கையை சிதைக்க அன்று ஜேஆர் ஆரம்பித்த இஸ்ரேலிய ஆதரவு என்ற காய் நகர்தல் இன்றைய அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திலும் மிக நுட்பமாகக் கையாளப்படும் அணுகுமுறைகள் தென்படுகின்றன.
ஜெனிவா மனித உரிமைச் சபையைக் கடந்து இன அழிப்பு என்ற விவகாரம் கனடாவில் பிரதான அரசியல் கட்சிகளிடையே சூடு பிடித்துள்ள பின்னணியில் சர்வசேத்தைக் ஜேஆர் – பிரேமதாச கால அணுகு முறைகளை, புதிய வடிவத்தில் அநுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கம் நுட்பமாகக் கையாள ஆரம்பித்துள்ளது.
மக்களை அரவனைத்தல் – குழந்தைகளை தூக்கி முத்தமிடுதல் போன்ற இராஜதந்திரங்கள் இஸ்ரேலிய மொசாட்டின் உத்திகளில் ஒன்று.
ஜேஆர் மொசாட்டின் பிரித்தாளும் தந்திரங்களை அன்று கையாண்டாலும், மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடந்து மக்கள் மத்தியில் துணிவுடன் சென்று குழந்தைகளைத் தூக்கி முத்தமிடுவது, சிறுவர்களுக்குக் கைகொடுப்பது, வயோதிபர்களுடன் அனுதாபமாக பேசுவது மற்றும் தேர்தல் காலத்தில் சலுகைகள் – நிவாரணங்கள் பற்றிய தகவல்களை மேடையில் வைத்து அறிவிப்பது போன்ற அரசியல் தந்திரங்களை, 1988 இல் பிரேமதாசாதான் அறிமுகப்படுத்தினார்.
அத் தந்திரேபோயங்கள் சந்திரிகா, மகிந்த, மைத்திபால சிறிசேன, ரணி விக்கிரமசிங்க, கோட்டாபய என்று நீடித்து, இன்று “மாற்றம்” சோசலிசம்” என்று மார் தட்டி ஆட்சிக்கு வந்துள்ள அநுரகுமார வரையும் வந்து நிற்கிறது.
மொசட்டின் ஒத்துழைப்பை பெற்ற ஜேஆர் ஜனவர்த்தன மாத்திரம் இந்த மாதிரியான அரசியல் பித்தலாட்டங்களைச் செய்யவில்லை.
ஆனால் அவர் 1978 இல் உருவாக்கிய ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் மூலமான சட்டங்களைப் பயன்படுத்தியே மேற்படி அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் – தங்கள் பௌத்ததேசியக் கடமையைச் செய்து முடித்திருக்கின்றனர்.
அதாவது மொசாட்டின் பரிந்துரைகளின் பிரகாரம் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் சிங்கள அரச அதிபர்கள் நியமனம், சிங்களப் பெயர்களைத் தமிழ் கிராங்களுக்குச் சூட்டுதல், பாடத் திட்டங்களில் பௌத்த சமய வரலாறுகளை புகுத்துதல், வரலாற்றுத் திணிப்பு போன்றவை இது மொசாட்டின் அணுகுமுறைதான்.
அதேபோன்று, சிறிமாவோ பண்டாரநாயக்க 1972 இல் உருவாக்கிய இலங்கைக் குடியரசின் முதலாவது ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டங்கள் மூலமாக அறிமுகப்படுத்திய “தமிழர்களின் ஆதரவுத் தந்திரம்” அதாவது துரையப்பாவை அருகில் வைத்துக் கொண்டு தமிழர்களின் அரசியல் உரிமையைக் கொழும்புடன் கதைப்பதற்கு சிறிமா அறிமுகப்படுத்திய நஞ்சு வேலைத் திட்டங்களை, ஜேஆரில் இருந்து இன்றைய அநுரகுமார வரை காண முடிகிறது.
அதேபோன்று, 1983 இல் இருந்து 2009 மே மாதம் வரையான போர்க் காலத்தில் தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்களை பயன்படுத்தித் தமிழர்களிடையே முரண்பாடுகள் – மோதல்கள் – பிரிவினைகள் போன்ற சிக்கல்களை உருவாக்கும் நஞ்சு வேலைத் திட்டங்களை மொசாட்டின் ஆலோசனையோடு அறிமுகப்படுத்தியவர் ஜேஆர்.
2009 மே மாதத்துக்குப் பின்னரான கடந்த 15 வருடங்களிலும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைச் சிதைக்க இலங்கை ஒற்றை ஆட்சி அரசு இந்த ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தியிருக்கிறது.
ஆனாலும் இன்றைய அநுரகுமார, ஆயுதக் குழுக்களை வேறு கோணத்தில் அணுக முற்படுகிறார். பிள்ளையான் கைது அதனை வெளிப்படுத்துகிறது. அதன் காரண- காரியம் விரைவில் தெரியவரும்.
ஒரு ”அரசு அற்ற இனம்”. அரசு உள்ள இனம் ஒன்றினால் எவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செய்யும் என்பதற்கு உலகில் சில உதாரணங்கள் உண்டு.
”நிதி – ”நீதி” – ”நிர்வாகம்” என்ற கட்டமைப்புள்ள அரசு ஒன்று தரைப்படை, விமானப்படை, கடற்படை என்ற முப்படைகளையும் பொலிஸாரையும் வைத்துக் கொண்டு எவ்வாறு மற்றொரு இனத்தை இன அழிப்புச் செய்யும் என்பதற்கு இஸ்ரேல் என்ற ஒரு அரசு உலகத்துக்கு உதாரணமாகிறது.
1983 இல் போர் ஆரம்பித்தும் ஜேஆர் இஸ்ரோலுடன் நட்புறவு கொண்டார். இந்த மொசாட் என்பது இஸ்ரெலிய அரசின் அதிகாரபுர்வ புலனாய்வுப் பிரிவு. 2025 இல் இப் பிரிவு மேலும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் மற்றும் இலங்கை போன்ற இன ஒடுக்கல் விவகாரங்களில் ஈடுபடும் அரசுகளுக்கு ஒத்துழைத்தல் என்ற செயற்பாடுகளை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த விரிவுபடுத்தல்களில் இலங்கை தமக்குரிய ஆதரவுகளை பெற்றுள்ளது. அன்று ஜேஆர் இஸ்ரேலிய மொசாட்டின் உதவிகளை பெற்றுக் கொண்டு தமிழ்ப் போராளிகளுக்கு எதிராகச் செயற்பட்டபோது, இந்தியா குறிப்பாக அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி கண்டித்திருந்தார்.
ஆனாலும் ஜேஆர் இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கில் சிங்கள மயமாக்கல் தொடர்பான விடயங்களுக்கு மொசாட்டின் ஒத்துழைப்பை துணிவுடன் பெற்றார்.
இப்போது அநுரகுமாரவின் அரசு இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை பேணுகின்றது. இந்தியாவின் மோடி அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. ஏனெனில் காசா போர் விவகாரத்தில் இந்தியா, இஸ்ரேல் அரசின் பக்கமே நிற்கின்றது.
அமெரிக்காவும் குறிப்பாக டொனால்ட் ட்ரம்பின் அரசு இஸ்ரேல் ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ளதால், இந்தியா இஸ்ரேலிய ஆதரவுடன் செயற்படுவதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.
இதனை இலங்கையும் நன்கு பயன்படுத்துகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த நகர்வை கையாண்டிருந்தார். ஆனால் தற்போது அநுரகுமார திஸாநாயக்க இந்த நகா்வை முழுமையாக வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை ஒழிக்க வெவ்வேறு புதிய கோணங்களில் காய் நகர்த்துகின்றார்.
இதன் ஒரு பகுதியாகவே தமிழ்த்தரப்பில் உள்ள கல்வியார்கள், துறைசார்ந்த வல்லுநர்களை நேரடியாக தேசிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்ள அல்லது மறைமுக ஆதரவு வழங்கும் நகர்வுகளை கன கச்சிதமாக அநுரகுமார மேற்கொண்டு வருகிறார். இதக்காக வழங்கப்படும் விலைகள் – பெறுமதிகள் வேறு.
ருஸ்டி என்ற முஸ்லிம் இளைஞன் கொழும்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கிழ் கைதாகி பின்னர் கடும் அழுத்தங்களினால் விடுதலை செய்யப்ப்டமை போன்ற நகர்வுகளும், உள்ளுராட்சித் தேர்தலில் வடக்குக் கிழக்கு மக்கள் குறிப்பாக வடமாகாண மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், இல்லையேல் நிதி கிடைக்காது என்ற எச்சரிக்கைகளின் பின்னாலும் அநுரகுமாரவின் அந்த நகர்வுகளின் நுட்பங்களை புரியக் கூடியதாக உள்ளது. .
கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதம் உருவாகி வருவதாகச் சமீபத்தில் அரசாங்கம் விடுத்த எச்ரிக்கைகளும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில் பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையும் வெளிச் சக்தி ஒன்றின் பரிந்துரைகளாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை.
இப் பின்புலத்தோடுதான் இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய சந்தேகங்களும் எழுகின்றன. அதாவது எதிர்காலத்தில் தமிழ்த் தேசியம் தொடர்பாகத் தீவிரமான அழுத்தங்கள் ஜனநாயக வழியில் கூட எழுந்து விடக் கூடாது என்ற பிரதான இலக்கு, இந்திய – இலங்கை அரசுகளிடம் வேரூன்றியுள்ளது என்பதையே அநுரகுமாரவின் பேச்சுகளும் நகர்வுகளும் காண்பிக்கின்றன. புதுடில்லியின் ஒத்துழைப்பு இதற்கு இல்லாமலில்லை.
பிறேமதாச ஆரம்பித்த மக்கள் சந்திப்பு அணுகுமுறை, அநுரவின் காலத்தில் அதாவது 2025 இல் மாறுபட்ட, ஆனால் தமிழர்கள் முழுமையாக ஏற்கக் கூடிய – நம்பக்கூடிய கைங்கரியங்கள் மிக அழகாகவும் நுட்பமாகவும் அரங்கேற்றப்படுகின்றன.
ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த நுட்பங்களையும் மொசாட்டின் மீள் வருகையையும் புரிந்துகொள்ளுமா?
-அ.நிக்ஸன்-