
மரண விளிம்பில் மத்திய கிழக்கு – ஈரானின் எச்சரிக்கையும், அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளும்
மத்திய கிழக்கில் எரியும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் முதல்… பச்சிளம் குழந்தை மீதான ராணுவச் சித்திரவதை வரை !
மனிதாபிமானம் மரணிக்கும் போர்க்களத்தின் கோர முகங்கள் ‘போரின் விளிம்பில் உலகம்’ – விசேட ஆய்வுத் தொகுப்பு
D. Rasmila
மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய மனிதப் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தத்தை எதிர்வரும் ஏப்ரல் 6, 2026 திங்கட்கிழமை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கோரிக்கையை ஏற்றே இந்த அவகாசம் வழங்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் அதனை முற்றாக மறுத்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா முயன்றால், டுபாயின் ஜெபல் அலி வளாகம் மற்றும் அபுதாபியின் பரக்கா அணுமின் நிலையம் உள்ளிட்ட வளைகுடாவின் முக்கிய மையங்கள் இலக்கு வைக்கப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவை (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க மெரைன் படையினர் நகர்வதாக CNN தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் முனைகள் விரிவடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவம் லெபனானின் முக்கியப் பாலங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மீது குண்டுவீசி வருகிறது. தெற்கு லெபனானை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து, அதனைத் தனிமைப்படுத்தும் வேலையை இஸ்ரேல் தீவிரமாக முன்னெடுத்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி, இஸ்ரேல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் (White Phosphorus) குண்டுகளைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 11 மற்றும் 12, 2023 ஆகிய திகதிகளில் காசா துறைமுகப் பகுதியிலும், அதன் பின்னர் தெற்கு லெபனானின் யோமோர் (Yohmor) போன்ற குடியிருப்புப் பகுதிகளிலும் இவை ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேல் பயன்படுத்தும் M825 ரக 155 மிமீ பீரங்கி குண்டுகள் வெடிக்கும்போது, அவை ஒரு தனித்துவமான ‘விரல் போன்ற’ (Knuckle-shaped) புகையை உருவாக்கி, குடியிருப்புப் பகுதிகளுக்கு மேல் நச்சு நெருப்பைப் பொழிகின்றன. நெதர்லாந்தின் ஆய்வாளர் அஹ்மத் பெய்டூன் (Ahmad Beydoun) கூற்றுப்படி, சுமார் 250 முறை இக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 39% குடியிருப்பு பகுதிகளையும், 17% விவசாய நிலங்களையும் இலக்காகக் கொண்டுள்ளன.
சுமார் 2,000 ஹெக்டேர் விளைநிலங்கள் சாம்பலாகியுள்ளன. 800°C க்கும் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் இக்குண்டுகள், மனித உடலின் எலும்பு வரை ஊடுருவி எரிக்கக்கூடியதுடன், நுரையீரலைச் செயலிழக்கச் செய்து சுவாச முடக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
மேலும், மண்ணில் புதைந்து கிடக்கும் பாஸ்பரஸ், விவசாயிகள் நிலத்தைத் தோண்டும்போது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து மீண்டும் எரியத் தொடங்கும். இது மண்ணின் செழுமையைக் குறைத்து, நச்சு உலோகங்களை (Cadmium, Lead) நிலத்தில் கலக்கச் செய்கிறது.
போர்க்களக் கொடூரத்தின் உச்சமாக, மார்ச் 22, 2026 அன்று 18 மாதமே ஆன கரீம் என்ற பச்சிளம் குழந்தை இஸ்ரேலிய ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட செய்தி உலகையே உலுக்கியுள்ளது. குழந்தையின் காலில் சிகரெட்டினால் சூடு போடப்பட்டும், ஆணியால் தாக்கப்பட்டும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை காசாவில் 72,267 பேர் உயிரிழந்துள்ளதுடன் 78% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் லெபனானில் அதிகாரிகளின் கூற்றுப்படி, மார்ச் 2 ஆம் திகதிமுதல், குறைந்தது 111 குழந்தைகள் உட்பட, குறைந்தபட்சம் 886 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் “Operation Epic Fury” மூலம் 1,190 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளின் பார்வை இங்கே பெரும் முரண்பாட்டைக் கொண்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களைக் கண்டிக்கும் கத்தார் போன்ற நாடுகள், ஒருபுறம் குடிநீர் ஆலைகள் மீதான தாக்குதலை மனித உரிமை மீறல் என்கின்றன. மறுபுறம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் பாஸ்பரஸ் பயன்பாட்டை “தற்காப்பு” என்று கூறி மௌனம் காக்கின்றன. இருப்பினும், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) கொண்டு செல்ல வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
நவீன ஆயுதங்கள் ஒருபுறம், பச்சிளம் குழந்தைகள் மீதான வன்முறை மறுபுறம் என மத்திய கிழக்கு ஒரு இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போர் என்பது வெறும் அதிகார மோதல் மட்டுமல்ல, அது ஒரு நிலத்தின் எதிர்காலத்தையே கருக்கிப் போடும் கொடூரம் என்பதற்கு லெபனான் இன்று ஒரு சாட்சியாக மாறியுள்ளது.
