தொண்டமான்கள் வழியில் இ.தொ.காவின் பயணம் தொடரும் – செந்தில் தொண்டமான் மே தின செய்தி

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வெற்றியை கொண்டாடும் முகமாக மே மாதம் 1 ஆம் திகதியை உலகத் தொழிலாளர்கள் நாளாக கொண்டாடுகிறோம்.
ஒரு நாட்டின் முதுகெலும்பு தொழிலாளர்கள் தான். பாட்டாளி வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளர்ச்சியடையும். இலங்கையில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் சுதந்திர இலங்கையிலும் கூட கடுமையான போராட்டங்கள் ஊடாகவே தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்ததுடன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களும் பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டன.
அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளனர். அதே வழியில் இ.தொ.கா தொடர்ந்தும் பயணம் செய்யும். தொழிலாளர்களுக்காக எமது தொழிற்சங்க ரீதியான செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்யும் அதேவேளை அவர்களின் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.