பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் – ஜனாதிபதி 

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் – ஜனாதிபதி 

 

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும், அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்களை 2048 வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை இழந்த குருநாகல் மாவட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும்  நிகழ்வு இன்று (09) பிற்பகல் கொபேகனே,விதிகுலிய பிரதேசத்தில்  நடைபெற்ற போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’  இன் பிரதான வேலைத்திட்டமாக செயற்படுத்தப்படும்  PROJECT 5M வேலைத்திட்டத்தின் கீழ், நிக்கவெரட்டிய, கொபேகனே, ரஸ்நாயக்கபுர, கொட்டவெஹெர, பன்னல, பிங்கிரிய, மஹவ மற்றும் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக அதே இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்றவர்களுக்காக புதிய  வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடுகள் வழங்குதல் இதன்போது இடம்பெற்றன.

பேரழிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்தாலும், தற்போது கணிசமான அளவிற்கு நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன்போது தைரியமாகவும், அர்ப்பணிப்புடனும் அயராது செயற்பட்ட முப்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட அனைவருக்கும்  தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அனர்த்தத்தையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இந்நாட்டுப் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், குருநாகல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )