
அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல
அவசரகாலச் சட்டமானது அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றதே தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்த பின்னர் ஆரம்பமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, 2026 ஜனவரி 06 பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாரிய இயற்கை அனர்த்தமாக அமைந்த, ‘டிட்வா’ சூறாவளியின் பின்னரான காலகட்டத்திற்கே நாம் தற்போது முகம் கொடுத்துள்ளோம். முழு நாட்டு மக்களும் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிட்டது. 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், இன்னும் பல மாவட்டங்களில் இந்த அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த தனிநபர்களும் குடும்பங்களும் இருப்பதை நாம் அறிவோம். இந்த இயற்கை அனர்த்தத்தினால் நாட்டின் மத்திய மலைநாட்டிற்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அனர்த்தத் தருணத்திலேயே உடனடி நிவாரணங்களை வழங்கியதோடு, இதன் தீவிரத்தைப் புரிந்துகொண்டு பாரிய வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.
இதன் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டே கௌரவ ஜனாதிபதி அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளையின் விதிகளுக்கு அமைய, 2025.11.28 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் யோசனைகளை முன்வைத்திருந்தனர். அவற்றையும் கருத்திற்கொண்டே கௌரவ ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்தார். இந்த அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்காகவே நாம் இந்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
இன்னும் 225 பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருகின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள். 6,592 குடும்பங்கள் இந்த மையங்களில் தங்கியுள்ளன. இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதன்படி 6,037 வீடுகள் முழுமையாகவும், 108,476 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இத்தகவல்களை நாம் நாளாந்தம் புதுப்பித்து வருகின்றோம். அதேபோல், பாதுகாப்பு மையங்களில் தங்காத ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தமது சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை பாதுகாப்பு மையங்களில் உள்ளவர்களை விட அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த அவசரகால நிலையை நீடிக்க வேண்டியுள்ளது. இந்தச் சட்டக் கட்டளையின் கீழ் எமக்கு ‘அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்’ அலுவலகத்தைப் பராமரிக்கவும், அந்தப் பதவியை அறிவிக்கவும், தேவையான சேவைகளை முன்னெடுக்கவும் முடிந்துள்ளது.
இந்த அவசரகாலச் சட்டத்தை நாம் அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்துகிறோம் தவிர, வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அல்ல என்பதை மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விசேட சூழ்நிலையில் அனர்த்த முகாமைத்துவத்தின் போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளுக்கு மிக விரைவாகப் பதிலளிக்க வேண்டியுள்ளதாலும், அரச அதிகாரிகள் உடனடித் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாலும், அவர்களுக்குத் தேவையான சட்டப் பின்னணியை உருவாக்குவதற்காக மாத்திரமே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம்.
இது ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், மக்களின் சுதந்திரத்தை முடக்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்ற சில குற்றச்சாட்டுகளை நான் கண்டேன். ஆயினும், நாம் இச்சட்டத்தினை வேறு எதற்கும் பயன்படுத்தப் போவதில்லை என்பதை கௌரவ ஜனாதிபதி அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் செயற்படுகிறோம்.
‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றங்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். அப்பணி இன்னும் முடிவடையவில்லை. அது மாற்றம் கண்டுவரும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஆகையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றும் போது, அந்த நிலத்தின் பாதுகாப்பு குறித்துப் பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே மீளக் குடியேற்ற முடியும். இப்போது தென்மேற்கு பருவமழைக் காலம் என்றாலும், இந்த மழையினால் பொதுவாக அனர்த்தங்கள் ஏற்படுவதில்லை. ஆயினும் தற்போதைய நிலையில் இந்த மழைவீழ்ச்சியும் ஓர் அனர்த்தகரமான நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே, நவம்பர் மாதப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு மிகவும் உன்னிப்பாக ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதனாலேயே அவசரகால நிலையைத் தொடர வேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதே எமது முழுமையான முயற்சியாகும். எமது அரசாங்கம், அரச அதிகாரிகள், வர்த்தக சமூகம், நாட்டு மக்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ், முப்படையினர் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ளும் சக்தி எமக்குக் கிடைத்தது. இதனாலேயே உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மிக விரைவில் வழமைக்குக் கொண்டுவர முடிந்தது.
அதேபோன்று, சர்வதேச ரீதியாகக் கிடைத்த ஒத்துழைப்புடன் குறுகிய காலத்திற்குள் அனர்த்தத்தின் பாரிய தாக்கத்திலிருந்து எம்மால் மீள முடிந்தது. அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக விரைவில் சீர்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. மாற்றமடைந்து வரும் சூழல் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
