அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களின் பயன் – 2026இல் மக்கள் அனுபவிப்பர்
![அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களின் பயன் – 2026இல் மக்கள் அனுபவிப்பர் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களின் பயன் – 2026இல் மக்கள் அனுபவிப்பர்](https://oruvan.com/wp-content/uploads/2024/12/anil.png)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருவதுடன், தற்போதைய தீர்மானங்களின் பிரதிபலனை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மக்கள் அனுபவிப்பர் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘RD’ இலிருந்து ‘CCC+’ ஆக உயர்த்தியுள்ளது. ஃபிட்ச் பொதுவாக ‘CCC+’ அல்லது அதற்குக் குறைவான மதிப்பீட்டைக் கொண்ட நாடுகளுக்கு சிறந்த ஸ்திரத்தன்மை உள்ளதாக கூறாது.
ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளதார ஸ்திரத்தன்மையை கருத்திற் கொண்டு எமக்கு அந்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது. சமகால அரசாங்கம் பொருளாதார ரீதியாக எடுத்துவரும் தீர்மானங்களின் பயனை 2026ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் மக்கள் அனுபவிக்க கூடியதாக இருக்கும்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிச்சயமாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்பதுடன், மக்களுக்கு சலுகைகளும் கிடைக்கும். அதுதொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்களின் எதிர்காலத்தை கருதியே எமது தீர்மானங்கள் அமையும். அதேபோன்று அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படுவதுடன், மேலதிகமாக இணைத்துக் கொள்ளக் கூடியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.