துருக்கியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு

துருக்கியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு

வடமேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து “எங்கள் 12 சகோதரர்களின் மரணத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்” என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், தெரிவித்துள்ளார்.

“எனது இறந்த சகோதரர்கள் மீது கருணை காட்டவும், அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று எர்டோகன் மேலும் கூறினார்.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய வேதியியல், இயந்திர, தொழில் பாதுகாப்பு மற்றும் புவி இயற்பியல் பொறியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் யில்மாஸ் துங்க்தெரிவித்தார்.

அந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This