தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலிய – இலங்கை இடையேயான உறவு

தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலிய – இலங்கை இடையேயான உறவு

அவுஸ்திரேலிய விமானபடைக்குச் சொந்தமான Beechcraft king Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய எல்லைப்படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்பு படை திணைக்களம் இணைந்து வெளியிட்ட கூட்டு ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (12) கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான அர்ப்பணிப்பு புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளதாக குறித்த ஊடக அறிவிப்பு தெரிவிக்கின்றது.

மேலும் குறித்த ஊடக அறிவிப்பில்,

“கடந்த ஒக்ரோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் இலங்கை விமானப்படையிடம் சட்டபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்த நவீன இரட்டை எஞ்சின் (Turboprop) விமானமானது, ஆட்கடத்தல் உட்பட நாடு கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையின் வான்வழி மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறனை பாரிய அளவில் மேம்படுத்தும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை பேணுவதற்கு இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் பரஸ்பர முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலியாவின் இதுபோன்ற அன்பளிப்புகள் அமைவதாக, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்தார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share This