தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – இராதா எம்.பி விடுக்கும் கோரிக்கை

திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு இலங்கையில் இனவாதம் மதவாதம் என்பன இல்லாமல் அனைவரையும் சமனாக மதிக்கின்ற அதே நேரம் அனைவருக்கும் சட்டமும் நீதியும் பொதுவானது என்ற வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது.
ஆனால் திடீரென திருகோணமலையில் ஒரு இரவில் புத்தர் சிலைவைப்பு, அதற்கு பொலிசாரின் எதிர்ப்பு, தடியடி, சிலை அகற்றல், மீண்டும் அதே பொலிசாரின் பாதுகாப்புடன் சிலையை பிரதிஸ்டை செய்தமை என்பன ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இன்று பலரும் முன்வைக்கின்றார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது.
தற்போது இது சர்வதேச விடயமாக மாறியுள்ளது. எனவே அரசாங்கம் இதற்கான முறையான தீர்வை வழங்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இனவாதிகளுக்கு செவி சாய்த்து நீங்களும் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தைப் போல ஒரு இனவாத அரசாங்கமாக மாறிவிட வேண்டாம்.
தவறு எங்கு நடந்தாலும் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எனவே, இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளாவிட்டால் சர்வதேச ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படலாம். இதன் மூலம் தற்பொழுது மிகவும் வேகமாக வளர்ந்த வருகின்ற உல்லாசத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.
(செய்தி – நுவரெலியா எஸ்.தியாகு)
