மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்!

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்!

கொழும்பு- மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தமிழ்ப் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த அறிவிப்பில்,

“கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது நேற்று (22) இறந்துள்ளார்.

மருதானை பொலிஸார் இந்த மரணத்தை உயிர்மாய்ப்பு என்று தெரிவித்துள்ளதோடு , கஞ்சா வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியறிந்து சடலத்தை பார்வையிட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இந்த மரணம் தொடர்பாகச் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

காலங் காலமாக இலங்கையில் பொலிஸார் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்து வந்துள்ள நிலையில், இந்தப் பொலிஸ் நிலைய மரணம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This