புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்

புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்

புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுயில்,

”மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராயும் குழுவை நியமிக்கும் யோசனையை அரசு முன்வைத்துள்ளது. ஒவ்வொரு அரசுகளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் இதுபோன்ற குழுவை அமைப்பது வழக்கமானது. இவ்வாறான குழுக்களின் ஊடாக அறிக்கைகளை சமர்ப்பிக்கப்படுவதானது காலத்தை கடத்தும் செயற்பாடாகவே இருக்கும். கடந்த கால வரலாறுகளில் இதனைப் பார்த்துள்ளோம்.

அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவை நியமிக்க அனுமதியளித்துள்ளது. இது எங்களுக்குச் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாகாண சபைத் தேர்தலை காலம் கடத்துகின்ற நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.

அமைச்சர்களும் அரசும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறிவந்த நிலையில் தற்போது அமைக்கப்படும் குழுவானது அந்தத் தேர்தலை காலம் கடத்துவதற்கானதா என்ற கேள்விகள் எழுகின்றன.

எவ்வாறாயினும் உடனடியாகப் பழைய முறையில் தேர்தலை நடத்தி அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டுமே தவிர, தேர்தலைப் பிற்போடுவதற்கான யுக்தியாக இவ்வாறான குழுக்களை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து காலம் கடத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்று கோருகின்றேன்.

இப்போது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கால கட்டத்திலேயே இருக்கின்றோம். இதனால் உடனடியாகத் தேர்தலை நடத்த முயற்சிகளை எடுக்க வேண்டும். இதனை விடுத்து குழுக்களை அமைத்து காலத்தை கடத்தி, அதனை அப்படியே கைவிடக்கூடாது.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படவுள்ள நிலையில் இந்த மாகாண சபைகள் முறைமைகள் இல்லாமல் செய்யப்படப் போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றேன்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் போது தமிழ்த் தரப்புகளையும் இணைத்து, தமிழ் மக்கள் விரும்புகின்ற வகையில் அதனை உருவாக்க வாய்ப்பை அரசு செய்ய வேண்டும். இதுவே ஜனநாயக மற்றும் நேர்மைத் தன்மையாக இருக்கும். அத்துடன் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடும் யுக்திகளை அரசு கையாளக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )