
சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம் ; பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்
டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பச் சுற்று போட்டிகள் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவடைந்துள்ளன.
அவுஸ்ரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும், அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்திருப்பதால் போட்டி அட்டவணையில் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.
சுப்பர் 8 சுற்றுக்கான எட்டு அணிகளும் ஏற்கனவே தெரிவாகி இருக்கும் நிலையில் இன்று தொடக்கம் சுப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.
தெரிவாகி இருக்கும் எட்டு அணிகளும் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குழு 1 இல் நடப்புச் சம்பியன் இந்தியாவுடன் சிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு 2 இல் இலங்கையுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
சுப்பர் 8 இல் ஒரு அணி தமது குழுவில் உள்ள மற்ற அணியுடன் ஒருமுறை மோதவிருப்பதோடு முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
சுப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இதேவேளை, நாளை இலங்கை – இங்கிலாந்து அணிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் மோத உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
