பிரதமரின் பாதுகாப்பு வாகன தொடரணி மீது விபத்தை ஏற்படுத்திய மாணவர் கைது

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவர் ஒருவர் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த 15ஆம்த திகதி இரத்தினபுரிக்கு நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.
இதன்போது எஹெலியகொட மொரகல பகுதியில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் பிரதமரின் வாகனத் தொடரணி மோதியுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டுநர் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த மாணவர் ஆவார்.
விசாரணையில் அவருக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் வாங்கப்பட்டு இரண்டு நாட்களே ஆகிறது என்றும், பதிவு நடவடிக்கைகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக செயற்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும், மோட்டார் சைக்கிளின் சாரதியும் காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் மீது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியமை, விபத்தைத் தவிர்க்கத் தவறியமை மற்றும் பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.