
இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் விரிவாக்க நடவடிக்கைகளைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் 85 உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
சர்வதேச சட்டங்களுக்கு முரணான இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை வல்லரசு நாடுகளும், பல அண்டை நாடுகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
குறிப்பாக, மேற்குக் கரையில் இஸ்ரேல் மீண்டும் நிலப் பதிவுகளை ஆரம்பித்துள்ளமையானது, பாலஸ்தீன நிலங்களை உத்தியோகபூர்வமாகத் தன்னுடன் இணைக்கும் முயற்சி எனப் பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் கண்டன அறிக்கையில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இருப்பினும், ஐநாவுக்கான பாலஸ்தீனத் தூதரகம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்தியாவும் இலங்கையும் இடம்பெறவில்லை.
சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராகப் பெரும் கண்டன அலை எழுந்துள்ள போதிலும், இலங்கை இந்தப் பட்டியலில் இணையாமல் தவிர்ந்துள்ளமை அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
