தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் – அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, “எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 26 அன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலங்கையர் பணிபுரிந்தார்.
தொழிற்சாலையில் இருந்த சக தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளியை செங்கல் குவியலில் கட்டி வைத்து, ஃபோர்க்லிஃப்ட் மூலம் தூக்கி, துன்புறுத்தி கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொழிலாளி டிசம்பர் 2024 இல் வேலை அனுமதி முறையின் கீழ் E-9 விசாவில் கொரியாவிற்கு சென்றதாகவும் சம்பவத்திற்கு முன்னர் சுமார் மூன்று மாதங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜியோனம் புலம்பெயர்ந்த தொழிலாளர் மனித உரிமைகள் வலையமைப்பு, தொழிலாளி வேலையில் தவறு இருந்ததாக தெரிவித்து சக தொழிலாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதுடன், கொரிய அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை தொழிலாளி உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்து சம்பவம் தொடர்பில் தென் கொரிய ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில்,
“என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு கலாச்சார அதிகார மையத்திலும் இதுபோன்ற துஷ்பிரயோகம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்.
சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு எதிரான மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளியின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை யாரும் சுரண்டவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
வெளிநாட்டில் பணிபுரியும் கொரிய குடிமக்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.