நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் தெவிநுவர உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் பொதுமக்கள், குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்கள் மற்றும் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி 19ஆம் திகதி மித்தெனியாவில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்ட சம்பவம், மற்றும் கொழும்பு புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் இதில் முக்கியமானதாகும்.

ஜனவரி முதல் இதுவரை நாட்டில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

ஜனவரி 4 – வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரத்தொட்ட பகுதியில் ஐந்து பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுன், இதில் 26 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜனவரி 07 – கல்கிஸ்ஸை, வட்டாரப்பால பகுதியில்அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 36 மற்றும் 20 வயதுடைய இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 09 – அஹுங்கல்ல பகுதியிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதுடன், இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சுடப்பட்ட நபர் லோகு பாட்டி என்ற குற்றவியல் கும்பல் உறுப்பினரின் உறவினர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்

ஜனவரி 13 – தெவிநுவர பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜனவரி 15 – தொடங்கொட, வில்பத பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து அன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜனவரி 16 – மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதே நாளில், கொஹுவல காவல் பிரிவின் களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கார் பாகங்கள் விற்பனை செய்யும் கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜனவரி 19 – கல்கிசை சிறிபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 24 வயதுடைய ஒருவரும் 36 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர். கொலை நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குள், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறிக்கொள்ளும் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

ஜனவரி 22 – அம்பலந்தோட்டை கோக்கல பகுதியில் காரில் வந்த ஒரு குழு, துப்பாக்கிச் சூடு நடத்தியது. எனினும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜனவரி 31 – காலி, ஹினிதும பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 07 – மினுவங்கொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 35 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.

பெப்ரவரி 10 – கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பெப்ரவரி 19 – மித்தேனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் கொள்ளப்பட்டனர். தந்தை ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், அதே நாளில், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவும் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பூசா சிறைச்சாலையிலிருந்துஅழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு ஒரு சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரால் நடத்தப்பட்டதுடன், அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

பெப்ரவரி 21 – ஜா எல பமுனுகமவில் உள்ள மோர்கன்வத்தே கடற்கரையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், அதே நாளில், கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, அதே நாளில் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து அந்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். பின்னர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் கொல்லப்பட்டனர்.

பெப்ரவரி 26 – மினுவங்கொடை பட்டதுவன சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மார்ச் 08 – கம்பஹாவின் அகராவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மார்ச் 13 – பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர், காலி, அக்மீமன, தலகல பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதற்கிடையில், அதே நாளில், வெலிவேரியவில் உள்ள அரலியகஸ்தேக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

மார்ச் 14 – அம்பலங்கொடை இடம்தோட்டை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் ‘பொடி சுத்தா’ என்ற 39 வயதுடைய அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.

மார்ச் 17 – மிதிகம – பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேநாள் மாலையில், கிராண்ட்பாஸ் நாகலம் தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் 22 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 -தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

Share This