
சிறப்பு வானிலை முன்னறிவிப்பு!! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளை மேற்கோள் காட்டி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட இதனை தெரிவித்துள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் கிழக்கு கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலைமை ஏற்பட்டால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, வட மாகாணத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் 75 – 100 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்
அதேபோல், வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் 50 – 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அல்லது 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதே நேரத்தில் மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தின் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அவ்வப்போது 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு 75 – 100 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட மேலும் தெரிவித்துள்ளார்.
