தற்போதைய தென்கொரிய ஜனாதிபதியும் பதவி நீக்கம்

தற்போதைய தென்கொரிய ஜனாதிபதியும் பதவி நீக்கம்

தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 151 வாக்குகள் மாத்திரமே தேவையாக காணப்பட்ட நிலையில் 192 சட்டமன்ற
உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆளுங்கட்சி உறுப்பினர் சிலர் வாக்கெடுப்பை புறக்கணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த மூன்றாம் திகதி (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர் அந்த சட்டத்தை மீளப்பெற்ற போதிலும் அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உட்பட பலரும் வலியுறுத்தினர்.

மேலும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தையும் எதிர்கட்சிகள் தாக்கல் செய்திருந்தன. ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வயடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து யூன் சுக்-இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டார்.

அவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகார துஷ்பிரயோகம் என ஆளும் கட்சியினர் விமர்சிப்பதுடன் சபாநாயகரை பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Share This