வவுனியா ஒமந்தையில் பொதுமகன் மீது இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியா ஒமந்தையில் பொதுமகன் மீது இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொதுமகனொருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் காயமடைந்த பொதுமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொதுமகன் அக்கிராம அமைப்புக்களின் முக்கிய பதவிகளில் உள்ளமையினாலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெறுவதினால் அக்கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையினை கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின் அடையாள அட்டையினை காட்டுமாறு கோரியுள்ளார். எனினும் அவர் தான் இராணும் என தெரிவித்து அடையாள அட்டையினை காட்ட மறுத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின் பிண்ணணியில் குறித்த பொதுமகன் அன்றைய தினம் மாலை வயல் காவலுக்காக சென்ற போது கொம்புவைத்தகுளம் இராணுவ முகாம் முன்பாக வழிமறித்த சிவில் உடை தரித்த 10க்கு மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமகன் மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமிற்குள் சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் குறித்த பொதுமகன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் , துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பொதுமகனின் நலனை கேட்டறிந்தமையுடன் சம்பவத்தினையும் கேட்டறிந்தனர்.

மேலும் அவ்விடத்திலிருந்தே சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தொலைபேசியூடாக கதைத்ததுடன் உரிய நடவடிக்கைகளுக்கு ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்குவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமகனின் கண் மற்றும் முதுகு பகுதி என்பவற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

Share This