மஹிந்தவுக்கான பாதுகாப்பு குறைப்பு – அரசியல் பழிவாங்கல் என்கிறது பொதுஜன பெரமுன

மஹிந்தவுக்கான பாதுகாப்பு குறைப்பு – அரசியல் பழிவாங்கல் என்கிறது பொதுஜன பெரமுன

அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சாகன தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டை பாதுகாத்த, இந்நாட்டில் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தலைவரான மஹிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழுவொன்றின் மீளாய்வின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டை பாதுகாத்த மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள அதே அளவிலான அச்சுறுத்தலா ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது? புலிகள் மற்றும் டயஸ்போராக்களால் மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள அதே அளவான அச்சுறுத்தலா மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது? எனவே, அரசாங்கத்தின் பாதுகாப்பு மீளாய்வு தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை.

ஜே.வி.பியின் ஒரு தரப்பை திருப்திபடுத்துவதற்காகவே இவ்வாறு மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவத்தினர் முகாம்களுக்கு சென்றால் எப்படி செலவீனம் குறையும்? அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படதான் போகின்றது.

அரசியல் பழிவாங்கலுக்காக வேறு யாரை வேண்டுமானாலும் தெரிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் நாட்டை பாதுகாத்த தலைவரை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்த வேண்டாம்.”-என்றார்.

CATEGORIES
TAGS
Share This