கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் அறுவர் பலி

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில ஆகிய இடங்களில் இந்த வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரந்தன் பகுதியில் A9 வீதியில் பேருந்து ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியுள்ளது.
இதன்போது சைக்கிளை செலுத்தியவர் மற்றும் அதன் பின்னால் பயணித்தவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பரந்தன் மற்றும் முதுர்வல பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என தொிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மொரவெவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன், துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமத்தை சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அனுராதபுரம், மல்வத்துஓயா இரும்புப் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வலஸ்முல்ல-ஹக்மன வீதியில் உள்ள நதுவல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நாய் மீது மோதி கவிழ்ந்ததில் மீயெல்ல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரலகன்வில-மனம்பிட்டிய வீதியில் உள்ள மெதகம பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவகல பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.