காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஷெட்டிஹள்ளியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஆறு மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் காது குத்தும் நிகழ்வு நடந்தது. காது குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக பொம்மல்லாப்புரா அரச மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர் பெற்றோர்.
அங்கிருந்த மருத்துவர் குழந்தையின் இரு காது மடல்களிலும் மயக்க மருந்து ஊசியை செலுத்தியுள்ளார். குறித்த மயக்க ஊசி அதிக வீரியம் நிறைந்தது என்பதால் குழந்தை உடனே மயங்கியதோடு வாயிலும் நுரை தள்ளியுள்ளது.
இதையடுத்து குண்டுலுபேட்டை அரச மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஊசியை செலுத்திய மருத்துவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் குறித்த மருத்துவர் கூறுகையில், குழந்தைகளுக்கு காது குத்தும்போது உறங்க வைப்பதற்காக மருந்து அல்லது மயக்க மருந்து கொடுப்பது இயல்பு.
பல இடங்களில் இப்படித்தான் குழந்தைகளுக்கு காது குத்துகிறார்கள். மருந்து கொடுப்பதற்கென அளவுகள் உண்டு. அளவுக்கதிகமாக கொடுத்தால் பிரச்சினை தான் எனக் கூறியுள்ளார்.