புதிய சாதனை படைத்தார் சுப்மன் கில்

புதிய சாதனை படைத்தார் சுப்மன் கில்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய அணியின் தலைவர் என்ற சாதனையை சுப்மல் கில் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 732 ஓட்டங்கள் குவித்திருந்தது சாதனையாக இருந்தது. எனினும், தற்போது அதனை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் 655 ஓட்டங்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடந்து வரும் ஐந்தாவது இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது சுப்மன் கில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவெடுத்துள்ளது.

இதன்படி, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன.

ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன் செய்ய இந்திய அணியும் தீவிரம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This