கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிஹான் துலான் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், எட்டு பேருடன் சாலையில் நடந்து சென்றபோது, முச்சக்கர வண்டியில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இரு தரப்பினரும் சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.