ஹெட்டிபொல பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உயிரிழப்பு

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்துள்ளதாகவும், குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமி ஹெட்டிபொல, மகுலகம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார்.
பன்றிகளை வேட்டையாட வந்த சிலரால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பாட்டி குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியின் சடலம் குளியாப்பிட்டி மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
12-கேஜ் துப்பாக்கி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.