சிஐடி பணிப்பாளராக ஷானி: மொட்டு கட்சி போர்க்கொடி

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
‘ஜே.வி.பி. அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்தி, அக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பாரதூரமான விடயமாகும். இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் இப்படி செயற்பட்டதில்லை.
தமக்கு தேவையான விதத்தில் சட்டத்தை செயற்படுத்தவும், அரசியல் எதிராளிகளை பழிவாங்கும் – ஒடுக்கும் நோக்கிலுமே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியாக இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.