ஷாகிப் அல் ஹசனுக்கு பந்து வீச தடை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷாகிப் அல் ஹசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்ட நிலையில், பந்து வீசியதில் ஷாகிப் அல் ஹசன் விதிகளை மீறியது தெரியவந்தது.
இதனையடுத்து, அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஷாகிப் அல் ஹசன் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இனிமேல், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச ஷாகிப் அல் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாகிப் அல் ஹசன் அறிவித்திருந்தார்.
எனினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் லங்காடி10 தொடரில் இணைந்துள்ளார். கோல் மார்வெல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷாகிப், கடந்த இரண்டு போட்டிகளிலும் பந்து வீசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.