ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர்.
விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக, அதிகாரிகள் திரும்பி வந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போது,
விஜேராம இல்லத்தில் ஆறு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர்சந்தன பண்டார தெரிவித்தார்.
நிலுவைத் தொகை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கமான நடைமுறையின்படி, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், நீர் கட்டணம் குறித்து பொறுப்பான நபர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், விஜேராம இல்லத்திற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.
அரசாங்க சொத்து ஆய்வாளர்கள் பொருட்களை வரிசைப்படுத்தி மகிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பொருட்களை பிரித்த பின்னர, வீடு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கூறுகிறது.
இந்த வீட்டில் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்திற்குச் சொந்தமான பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும் மகிந்த தரப்பு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச இந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.
எனவே, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் திகதியில் செலுத்த வேண்டும்.
எனவே, இந்த வீட்டை விரைவில் கையகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகிந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.