நாய் வண்டியில் ஏறமாட்டேன் – எச்.ராஜா ஆவேசம்

நாய் வண்டியில் ஏறமாட்டேன் – எச்.ராஜா ஆவேசம்

நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக பேசியுள்ளார்.

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், 1000 கோடி ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக தரப்பு போரட்டம் முன்னெடுத்துள்ளது.

இதன்படி, இன்று எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழிசை, மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர் அவர்களின் வீட்டிலேயே கைது செய்யப்பட்ட நிலையில், எழும்பூரில் வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

எழும்பூரில் பாஜக நிர்வாகிகளுடன் போரட்டம் நடத்த வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எச.ராஜா,

“நான் என்ன குற்றவாளியா? குற்றவாளி ஏறும் வண்டியில் நான் ஏறமாட்டேன். செந்தில் பாலாஜி என்ற குற்றவாளியை சிறையில் வைத்து, அவர் மீண்டும் இன்று வந்து குற்றம் செய்கிறார்.

செந்தில் பாலாஜியை கைது செய்ய உங்களுக்கு முதுகெலும்பு உண்டா?. நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? செந்தில் பாலாஜியை உங்களுக்கு கைது செய்ய முடியுமா?

காவல்துறை வாகனத்தில் நான் ஏறமாட்டேன். எங்களை நீங்கள் இங்கு கைது செய்யலாம். நாங்கள் வீடு-வீடாக செல்வதை யாராலும் தடுக்க இயலாது” என எச்.ராஜா வாக்குவாதம் செய்தார்.

இதனால் அங்கு மாநகர பேருந்து கொண்டு வரப்பட்டு, அதில் எச்.ராஜா அழைத்துச் செல்லப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This