23,000 அரச ஊழியர்கள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

23,000 அரச ஊழியர்கள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் நேற்று (19) நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவைத் திட்டத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”அதிகாரத்தில் இல்லாதபோது, மின்சார சபை ஊழியர்களின் வேலைகளைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்யத் தயாராக இருந்த தொழிற்சங்கத் தலைவர்கள், தற்போது அதிகாரத்திற்கு வந்த பிறகு, மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை விடுத்து, ஆட்சியைப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

அப்போது பெருமையாகப் பேசிய இந்தத் தலைவர்கள், இன்று அனைத்தையும் மறந்துவிட்டு, அரசாங்கத்தைப் பாதுகாக்க கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தைப் பாதுகாக்க கொலை செய்யவும், உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் விவசாயிகள், தொழில்முனைவோர், அரச ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் அரசாங்கம் மறந்துவிட்டது.

ஜனநாயகத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டு மௌனமாக இருப்பதா அல்லது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்களைப் பாதுகாக்க வீதியில் இறங்குவதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

இத்தகைய ஜனநாயகப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க தான் தயாராக இருக்கின்றேன். மக்களுக்குத் தரமான உரமோ, உர மானியங்களோ கிடைப்பதில்லை, களைக்கொல்லிகள் கூட தரம் குறைந்தவையாக இருக்கின்றன.

உயர்தர விதைகள், விவசாய உபகரணங்கள் மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் சிரமப்படுவதுடன், காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்குக்கூட காப்பீட்டு இழப்பீட்டு முறை இல்லை.

இந்த மக்களுக்காகப் போராடி அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரத் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்தார்.

 

Share This