
அரசாங்கத்தின் பொருளாதார அணுகுமுறை குறித்து சஜித் கேள்வி
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு எடுத்த அணுகுமுறையில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் கடன் நிலைத்தன்மை இணக்கப்பாடு மற்றும் சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை திருத்தியமைப்பதற்குத் தற்போதைய ஆளும் தரப்பினர் வாக்குறுதிகள் பலவற்றை வழங்கியிருந்தனர்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும் கொள்கைகளுக்கு எமது ஆதரவைப் பெற்றுத் தருவோம்.
பொருளாதார ரீதியிலான தீர்மானங்களை வெளிப்படையாக கருத்தாட எதிர்க்கட்சிக்குப் பொறுப்பு காணப்படுகின்றது.
இந்த அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் இணப்பாடுகளை உள்ளவாறே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதனால் சாதாரண குடிமக்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள பொருளாதார பிரவேசத்தை “Voodoo Economics” என அழைக்கலாம்.
பிரசித்தமான கோஷங்கள் மற்றும் பேரினப் பொருளாதார குறிகாட்டிகளை மட்டுமே நம்பியிருப்பதால், அடிமட்ட மக்கள் அனுபவிக்கும் உண்மையான சிரமங்களைப் புரிந்துகொள்ள அது தவறிவிட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே, அதிகரித்து வரும் சமத்துவமின்மையை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள், வளங்கள் மற்றும் செல்வத்தின் நியாயமற்ற மற்றும் சமமற்ற விநியோகத்திற்கு வழிவகுக்கின்றது என்றும் தெரிவித்தார்.
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புபட்டு, அவர்களின் பொருளாதார தீர்மானங்கள் மீது ஏற்படுத்தும் மனிதாபிமான தாக்கத்தை அறிந்து கொள்ளுமாறு கொள்கை வகுப்பாளர்களிடம் தான் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
