போரினால் பிரிந்த குழந்தைகளைத் தாய்நாட்டுக்கு அனுப்ப ரஷ்யா-உக்ரேன் திட்டம்

ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
இந்நிலையில் போரினால் பிரிந்த குழந்தைகளை அவர்களின் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்ப ரஷ்யா மற்றும் உக்ரேன் திட்டமிட்டுள்ளன.
முதற்கட்டமாக உக்ரேனில் உள்ள 16 ரஷ்ய குழந்தைகளை நாட்டுக்கு அழைத்து வர மாஸ்கோ நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேபோல் ரஷ்யாவில் உள்ள 10 உக்ரேனிய குழந்தைகளை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கவும் மாஸ்கோ திட்டமிட்டுள்ளது.
ரஷ்ய குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பை வழிநடத்தும் மரியா வோவ-பிலோவா இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
“குழந்தைகளை அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் மட்டுமே ஒப்படைப்போம். அதில் தெளிவாக உள்ளோம்“ என்று மரியா தெரிவித்துள்ளார்.
இதுவரை 95 உக்ரேனிய குழந்தைகளை அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் 17 ரஷ்ய குழந்தைகள் நாடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவும் உக்ரேனும் இதற்கு முன்னர் அவரவர் நாடுகளிடம் குழந்தைகளை ஒப்படைத்துள்ளன. இதுவரை 1,277 குழந்தைகளை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளதாக உக்ரேன் கூறியது.
இருப்பினும் பெற்றோரின் அனுமதி இல்லாமல் போர் காலத்தில் ரஷ்யப் படையினர் 19,500க்கும் மேற்பட்ட உக்ரேனிய குழந்ததைகளை கடத்திச் சென்றதாக கிய்வ் குற்றஞ்சாட்டுகிறது. இது மனித உரிமை மீறல் என்றும் உக்ரேன் தெரிவித்துள்ளது.
போர்ப் பகுதிகளில் உள்ளவர்களை வெளியேற்றி வருகிறோம் மேலும் எளிதாக பாதிக்கக்கூடிய குழந்தைகளையும் பாதுகாத்துள்ளோம் என்று ரஷ்யா தற்காத்து பேசுகிறது.
போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனில் சுமார் 10.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பு காரணங்கள் கருதி தங்களது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
குழந்தைகளை கடத்துவதாக கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் மரியாவுக்கும் கைதானை பிறப்பித்தது.