340 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்திய ரஷ்யா – வெளிநாட்டுப் படைப் பிரிவுகள் மீதும் தாக்குதல்

340 உக்ரேனிய ட்ரோன்களை தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது.
அதே காலகட்டத்தில் மூன்று HIMARS ரொக்கெட்டுகளை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, ரஷ்யப் படைகள் உக்ரேனிய கட்டளையிடும் நிலைகள், வெளிநாட்டுப் படைப் பிரிவுகள் மற்றும் ட்ரோன் சேமிப்பு வசதிகள் மீதும் தாக்குதல்களை நடத்தியது.
கூடுதலாக, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள நோவோனிகோலேவ்காவின் குடியேற்றத்தை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உக்ரைனின் ஆயுதப்படைகள் சமூக ஊடகங்களில் குபியன்ஸ்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறின.
ரஷ்யப் படைகள் குபியன்ஸ்க்குக்கு பணியாளர்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தும் குழாய்வழியின் வெளியேறும் இடத்தையும் உக்ரைனியப் படைகள் பாதுகாத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
உக்ரேனிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், உக்ரேனியப் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மீட்டெடுத்ததை உறுதிப்படுத்தினார்.
ரஷ்யாவின் பாஷ்கார்டோஸ்தான் குடியரசின் தலைநகரான உஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைனிய இராணுவ புலனாய்வு அமைப்பின் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
உக்ரைன் தரப்பு, ட்ரோன்கள் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும், இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டு முக்கியமான உற்பத்தி உபகரணங்களை சேதப்படுத்தியதாகவும் கூறியது.
பாஷ்கார்டோஸ்தான் குடியரசின் தலைவர் ராடி கபிரோவ், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இதனால் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் தடைபவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.