ரோஹித அபேகுணவர்தனவின் மகள் தலைமறைவு

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மெலனி அபேகுணவர்த்தன மற்றும் அவரது கணவரை கைது செய்ய பாணந்துறை வாலானா ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள லேண்ட் குரூசர் ஜீப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று முன்தினம் (19) களுத்துறையில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்குச் சொந்தமான வீட்டை பொலிஸார் சோதனை செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அவர்கள் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களின் கையடக்க தொலைபேசியின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (19) மதுகம நகரில் பாணந்துறை வாலானா ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப்பைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ஜீப் ஜீப்புடன் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளில், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மெலனியால், ஜீப் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலி எண்களைப் பயன்படுத்தி மோட்டார் வாகன பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த ஜீப் வாகனம் ரோஹித அபேகுணவர்தனவின் மகளால் 2024 ஆம் ஆண்டு 10 வது மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஜீப் வாகனம் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் நேற்று (20) மதியம் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஓகஸ்ட் (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.