தலைப்பாகைகள் அகற்றம் – அமெரிக்க அதிகாரிகளால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடுமை

தலைப்பாகைகள் அகற்றம் – அமெரிக்க அதிகாரிகளால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடுமை

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களின் தலைப்பாகைகளை அகற்ற அமெரிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களை அமெரிக்க அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய மத அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை (பெப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்கள் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த விமானத்தில் இந்தியா வந்த சீக்கியர்களை அமெரிக்க ராணுவத்தினர் தலைப்பாகைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்திய கொடுமை அரங்கேறியுள்ளது.

அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தை அடைந்ததும், குடியுரிமை தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க வரிசையில் நின்றபோது, ​​சீக்கியர்கள் பலரும் தலைப்பாகை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த விமானத்தில் சுமார் 24 சீக்கியர்கள் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்த சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) ஊழியர் சந்தீப் சிங் மற்றும் பலர், உடனடியாக அவர்களின் தலையை மறைக்க ‘பட்கா’ மற்றும் ‘பர்ணா’ (சிறிய வகையிலான தலைப்பாகை) ஆகியவற்றை வழங்கினர்.

இந்த விவகாரம் எஸ்ஜிபிசி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சீக்கிய மத உணர்வுகளை மதிக்காத அமெரிக்க அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய எஸ்ஜிபிசி செயலாளர் பிரதாப் சிங், “நாடுகடத்தப்பட்டவர்கள் தீவிரவாதிகள், குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் நாடுகடத்தப்பட்டவர்களை கைகளில் விலங்கிட்டு சங்கிலியால் பிணைத்திருப்பது மட்டுமல்லாமல், அடிப்படை மத உரிமைகளை மீறி, சீக்கியர்களின் தலைப்பாகைகளை அகற்றி அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர்.

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடுகடத்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும். அதற்கு மாறாக, பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து அமெரிக்க அதிகாரிகளால் இத்தகைய அவமானகரமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சீக்கியர்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று அவர் கூறினார்.

நாடுகடத்தப்பட்டவர்களை வரவேற்க பஞ்சாப் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் மற்றும் அவரது சக அமைச்சரவை உறுப்பினரான ஹர்பஜன் சிங் ஆகியோர் வந்திருந்தனர்.

அமெரிக்காவிலிருந்து வந்த சீக்கியர்கள் அமைச்சர்களுடன் பேசுகையில், ​​தங்கள் தலைப்பாகைகளை அகற்றும்படி அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், பின்னர் அவர்களால் கைவிலங்கு போடப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கையில் ​​அவர்களின் கைவிலங்குகள் அகற்றப்பட்டன. ஆனால் அவர்களின் தலையை மறைக்க எந்த துணியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Share This