ரோயல் பார்க் குற்றவாளிக்கு சிவப்பு கைது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஜூட் சமந்த ஜெயமஹாவை கைது செய்ய அதிகாரிகள் சிவப்பு கைது பிடியாணையை பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (28) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
ஜூட் சமந்த ஜெயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இந்த தகவலை தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜூன் 6, 2024 அன்று, ரோயல் பார்க் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஜூட் சமந்தவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டவராகக் கருதப்படுவதால், அவர் வசிக்கும் நாட்டிலிருந்து அவரை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஜூட் சர்மந்தாவை விடுவித்திருந்தார், மேலும் அந்த மன்னிப்பு சட்டப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜூட் சர்மந்தாவை காவலில் வைக்க உத்தரவிட்டது.