ரணில் இன்று புதுடில்லி செல்கிறார் – மோடியை சந்திக்கவும் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (பெப்ரவரி 27) இந்தியா செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை சர்வதேச தூதர்களின் பங்கேற்புடன் நடைபெறும் மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தவே ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்ல உள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
தெற்காசியாவின் சமகால அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்த ரணில் விக்கிரமசிங்க இங்கு உரை நிகழ்த்த உள்ளார்.
இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடனும் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தப் பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது விஜயம் இதுவாகும்.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்ப உள்ளதாகவும் தெரியவருகிறது.