யாழில் இராணுவ முகாம்களை அகற்றக் கோரி போராட்டம்

யாழில் இராணுவ முகாம்களை அகற்றக் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி இன்றைய தினம் காலை போராட்டமொன்று இடம்பெற்றது.

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை எட்டு மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட்டது.

வர்த்தகர்கள், பொதுமக்களை ஒன்றிணைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பருத்தித்துறை துறைமுகப் பகுதி மற்றும் வெளிச்ச வீட்டடியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பொது அமைப்புகளை ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் தபால் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடம் என்பவற்றை ஆக்கிரமித்து பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், தபால் நிலையம் பிறிதொரு கட்டடத்தில் இயங்கி வருவதுடன் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தை பருத்தித்துறை நகருக்கு வெளியே இடம்மாற்றுவதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதனால், பருத்தித்துறை நகரின் முக்கிய அடையாளங்களான நீதிமன்றம், தபால் நிலையம், வெளிச்சவீடு ஆகியவற்றை அந்த அந்த இடங்களிலேயே உறுதிப்படுத்தும் வகையிலும், குறித்த பகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ, கடற்படை முகாம்களை அகற்றுமாறு கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )